முன்பெல்லாம் சென்னையில் வசிக்கும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் தங்களைத் தேடி கிராமத்திற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருகையை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்து இருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் வரும்போதே, இப்ப எந்த இடத்துல இருக்கீங்க... அப்ப இன்னும் கொஞ்ச நேரம்தான்... எனத் தொடர்ந்து செல்போனை போட்டு கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அதேபோன்று கோயம்பேடு உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை விடுமுறை காலங்களில், பண்டிகைக் காலங்களில் ஊருக்கு வருமாறு அன்புக் கட்டளை இடுவார்கள் கிராமத்து உறவினர்கள்.
உறவினர்களின் அன்புக்கு மதிப்பளித்து பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையேயும் கிராமங்களுக்கு வருகை தந்து உறவினர்களின் வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள், துக்க நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலந்துகொண்டு சென்னை திரும்புவார்கள். அப்படித் திரும்பும்போது மீண்டும் எப்போது வருவீர்கள் என்று ஏக்கத்தோடு கேட்பார்கள் கிராமத்து உறவினர்கள்.
இப்போது சென்னையில் உள்ளவர்கள் கரோனா காரணமாக கிராமங்களில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பலாம் என்ற எண்ணத்தில் ஊருக்கு வருகிறேன் என்று போன் போட்டால், இங்கும் நிலைமை சரி இல்லை... நீங்க அங்கேயே பாதுகாப்பாக இருங்க... என்று அறிவுரை கூறும் உறவுகளாக பலர் மாறிவிட்டனர்.
கரோனா உறவுகளையும் நண்பர்களையும் பிரித்து வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்குள்ளே இருந்த பாசம், அன்பு, நேசம் இவைகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது கரோனா. வரும் காலங்களில் இந்த நோய்களிலிருந்து விடுபட்டு சகஜமான நிலைக்கு மக்கள் திரும்பும்போது பல்வேறு நண்பர்கள், உறவினர்கள் மனநிலையில் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும்.
அந்த அளவுக்கு இந்த கரோனா உயிர் பயம் ஏற்படுத்தி உறவுகளுக்கு மத்தியில் சங்கடத்தையும், சஞ்சலத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலருக்கு சென்னையில் உள்ள உறவினர்கள் நோய்ப் பரவல் காரணமாக எப்படி இருக்கிறார்களோ? என்ன ஆனார்களோ? என்று உண்மையான அக்கறையோடும், பாசத்தோடும், நேசத்தோடும் உள்ளவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் மேற்படி எண்ணங்கள் உள்ளவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
நம் மீது அக்கறை உள்ளவர்கள் யார்? போலித்தனமான உறவினர்கள் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண வழிவகுத்துள்ளது கரோனா.