நெல்லை மாவட்டம் கடையம் அருகே மலை அடிவாரத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடந்தது. வனத்துறையினர் நடத்திய பரிசோதனையில் அந்த சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, வனவிலங்குகளை கொல்ல பொதுமக்களே விஷம் வைத்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு, அழகப்பபுரம், கோவிந்தபேரி உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. அவ்வபோது ஊருக்குள் புகும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள், வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடிச் செல்கின்றன. சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தோரணமலைப் பகுதியில் ஒரு சிறுத்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. பாம்பு கடித்து சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஷம் வைத்து விஷமிகள் வேண்டுமென்றே சிறுத்தையை கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.
முயல், மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து வேட்டை நாய்களை, வனத்துறையினர் அண்மையில் பறிமுதல் செய்தனர். எனவே வனத்துறையினர் மீதான ஆத்திரத்தில் யாரேனும் வேண்டுமென்றே சிறுத்தையை விஷம் வைத்து கொன்று இருக்கலாம். அல்லது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதால், சிறுத்தைகளை கொல்ல சதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக தெரியவில்லை. எனவே, வேட்டை நாய்களை பறிமுதல் செய்ததற்கு பழி வாங்கவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க வேண்டும். வனவிலங்குகளிலிருந்து மக்களையும், மக்களிடம் இருந்து வனவிலங்குகளையும் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
காடு அழிந்தால் நாடு அழியும் என்பதை உணரவேண்டிய தருணம் இது.!