சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (27/11/2021) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தென்காசி, டெல்டா மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 29ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும். மிக கனமழை 15 இடங்களிலும், கனமழை 34 இடங்களிலும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ., மாமல்லபுரத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, செய்யாறில் தலா 18 செ.மீ., கட்டப்பாக்கத்தில் 17 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 16 செ.மீ., மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை தலா 15 செ.மீ., மழை பதிவானது.
இன்றும் நாளையும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.