Skip to main content

‘சக்ரா’ வசூல் விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

chakra film actor vishal chennai high court order

 

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, முதல் இரண்டு வார வசூல் விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷாலின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படத்தின் கதையை, அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்து, அந்தப் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை மீறும் வகையில், விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், தன்னிடம் கூறிய அதே படக்கருவை உருவாக்கி உள்ளது காப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

 

படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய இந்த வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்றம், 'சக்ரா' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. சக்ரா படம் பிப்ரவரி 19- ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தடையின் காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது.

chakra film actor vishal chennai high court order

 

இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'சக்ரா' படத்தின் இயக்குனரான ஆனந்தன், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவியிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் விஷாலுக்கு முன்பே தெரியுமா, தெரிந்துதான் படத்தைத் தயாரித்தாரா என்பது போன்ற விஷயங்களெல்லாம் விரிவான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்பதாலும், தற்போதைய நிலையில் படம் வெளியாகத் தடை விதித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால், தடை விதிப்பது வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதாக உத்தரவிட்டார். 

 

எனினும், வழக்கு விசாரணையை நிலுவையில் வைப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிப்ரவரி 19- ஆம் தேதி முதல் வரும் மார்ச் 5- ஆம் தேதி வரையிலான படத்தின் முதல் இரண்டு வார வசூல் விவரங்களையும், ஓ.டி.டி. தளங்களுக்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென, நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்