சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராமத்தை ஒட்டி ஓடும் பரவணாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையொட்டி பூவாலை, மனிக்கொல்லை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 ஏக்கர் நெற்பயிர் வீணாகியது. அங்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மழைவெள்ளம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச்செய்வதாக கூறினர். இவருடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் விஜய ராஜ்மோகன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக மண்டல அலுவலர் ரணண்ஜெயசிங், ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலாளர் வரபிரசாத், கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.