தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் விளக்கமளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (31.08.2021) தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “தொழில்துறையில் மிக முக்கியமான முதுகெலும்பாக இருப்பது சிப்காட் நிறுவனம். அந்நிறுவனம் 50 ஆண்டுகளை முடித்து பொன் விழா காண்கிறது. 15 மாவட்டங்களில் 24 தொழில் பூங்காக்களை உருவாக்கியுள்ளது. 8 தொழில் பூங்காக்கள் 5000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் 18 தொழில் பூங்காக்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. டான்செம் சார்பில் அரியலூரில் புதிய ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆலை அதனுடைய உற்பத்தித் திறனை 98 சதவீதம் எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக ‘வலிமை’ என்கிற பெயரில் வெளிச்சந்தையில் புதிய சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்றார்.