கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எல்.முருகனுக்கு தியாகதுருகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். இதனையடுத்து, கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அலுவலக திறப்பு உள்ளிட்டவற்றில் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூடியதாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பா.ஜ.க தலைவர் முருகன் உட்பட சுமார் 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் எல்.முருகனிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ''தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் மீதும் வழக்குப் போட வேண்டியிருக்கும். அத்தனை அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அத்தனை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அனைத்து கட்சித் தலைவர்கள் மீதும் வழக்குப் போட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. யார் யார் எங்கெங்கே என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்றார்.