
தெலுங்கில் ஹிட்டான ‘உப்பெனா’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கு பட இயக்குநர் புஜ்ஜி பாபு சனா உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான 'உப்பெனா' படத்தை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சுகுமார் என்பவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சி பாபு சனா இயக்கியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘உப்பெனா’, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதைத் தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்தப் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்நிலையில், தனது கதை திருடப்பட்டு ‘உப்பெனா’ படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த எஸ்.யு. டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘ஜெயக்குமாரின் திரைக்கதை’, ‘மகாபலிபுரம்’, ‘அய்யாசாமி’ படங்களில் பணியற்றிய அனுபவத்தில், ‘உலகமகன்’ என்ற கதையை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தர்மபுரியைச் சேர்ந்த சம்பத் என்ற உதவி இயக்குநரிடம் 2015ஆம் ஆண்டு தெரிவித்திருந்ததாகவும், காதலின் புனிதத்தை உணர்த்தும் புதிய கருத்துக்களுடன் கூடிய தனது கதையில் தமிழ் நடிகர்கள் யாரும் நடிக்க முன்வராததால், தெலுங்கு பட உலகில் முயற்சிக்கலாம் என சம்பத் தெரிவித்ததால், கதையின் கரு முதல் திரைக்கதை வரை அனைத்தும் அடங்கிய தொகுப்பை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். சம்பத்துக்கு அனுப்பிய தனது ‘உலகமகன்’ படைப்பு, சிலரால் திருடப்பட்டு, தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படமாக உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, ‘உப்பெனா’படத்தின் கதை தன்னுடையது என்று அறிவிக்க வேண்டுமெனவும், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம்தயாரிக்கத் தடை விதிக்க வேண்டுமெனவும், பிற மொழிகளில் ரீமேக் உரிமையை விற்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். டல்ஹவுசி பிரபு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், வழக்கு குறித்து விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தைத் தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் புஜ்ஜி பாபு சனா,இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் சம்பத் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)