கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள பணிக்கன் குப்பம் வி.கே.டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், கடந்த 2ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காடாம்புலியூர் பகுதியில் இருந்து பண்ருட்டி நோக்கி இரண்டு சிறுவர்கள் ஒரு இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் வண்டியை ஓரமாக நிறுத்துமாறு சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சைகை மூலம் தெரிவித்தார்.
ஆனால் அந்த சிறுவர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்து சப் இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். பின்புறம் அமர்ந்திருந்தது 17 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தையின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.