உணவுப் பொருட்களான மஞ்சள், அரிசி முதல் போதை பொருட்களான கஞ்சா, ஹெராயின் பிரவுன் சுகர் உள்ளிட்டவை வரை தென்மாவட்ட தூத்துக்குடியின் கடல் மார்க்கமாகக் கடத்தப்படுவது அண்மையில் சகஜமான தொழிலாகவே மாறிவிட்டது.
அந்த வகையில், இப்போது புதிய போதை வஸ்து ‘க்யூ’ பிரிவிடம் மாட்டியிருக்கிறது. க்யூ பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா, உதவி ஆய்வாளர்களான சிவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீஸ் டீம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளி கிராமத்தின் நவஜீவன் விவசாயப் பண்ணையை முற்றுகையிட்டது. அதிரடியாக நுழைந்த க்யூ பிரிவின் அலசலில், ஆயில் போன்ற, பிளாஸ்டிக் பேக்குகளிலிருந்து டப்பாவில் அடைக்கப்பட்ட, மூன்று கிலோ மணக்கும் அந்தப் பொருளையும், அங்கிருந்த 2 பேரையும் மடக்கி விசாரித்தனர். இது கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சா ஆயில், அதிக போதை தரும் சரக்கு. கடல் வழியாக மாலத்தீவிற்கு அனுப்பவிருந்ததாக சொல்லியிருக்கிறார்கள்.
மேலும், அவர்களது விசாரணையில் பிடிபட்ட நாகல்குளம் பகுதியின் பிரிட்டோவும், பண்ணைவிளையின் விக்டரும், தாங்கள் கடத்தல் கூலிகள். தேனியிலிருந்து கொண்டு வந்தவர் கொடுத்ததை, டப்பாக்களில் அடைத்து மாலத்தீவிற்கு அனுப்பும்படியான தகவலையும் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட ஹசீத் எனப்படும் கஞ்சா ஆயிலின் இந்தியச் சந்தை மதிப்பு 45 லட்சம் என்கிற க்யூ பிரிவு அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இதன் கிராக்கி ஒன்றரை கோடி (இந்திய மதிப்பு) என்கிறார்கள். கஞ்சா ஆயிலையும் பிடிபட்ட இருவரையும் போதை தடுப்பு யூனிட்டான என்.ஐ.பி. வசம் ஒப்படைத்திருக்கிறது க்யூ பிரிவு.