நாகை துறைமுகத்திலிருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா மூட்டைகளைப் பறிமுதல் செய்ததோடு, ஐந்து மீனவர்களையும் கைது செய்துள்ளனர் தனிப்படை போலீசார்.
நாகை உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் அதிகரித்தபடியே இருக்கிறது. கடத்தலை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையும் பல்வேறு யுக்திகளை கையாண்டு தினசரி ஏதோ ஒரு பகுதியில் கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்தும், கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் கஞ்சா கடத்தல் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு ஏதுவாக விசைப்படகு ஒன்றில் கஞ்சா மூட்டைக்களை பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் சரவணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பு, நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விசைப்படகில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 5 லட்சம் மதிப்பிலான படகு, 2 லட்சம் மதிப்புடைய இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் என மொத்தமாக ஒரு கோடியே 52 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.