சமீப ஆண்டுகளாக எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி பதவிகள் உட்பட எந்தத் தேர்தல் நடந்தாலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் என்ற பெயரில் கூட்டமாக அழைத்துச் செல்வது வாடிக்கையாகிவருகிறது. தற்போது 9 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல்களிலும் அப்படியே நடந்துவருகின்றன.
நேற்று முன்தினம் (22.09.2021) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டி. ஒரத்தூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தனது ஒன்றிய கவுன்சில் பகுதியில் உள்ள கொரட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை மினி டெம்போவில் ஏற்றிக்கொண்டு திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து, வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு தங்கள் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் அவர்களை ஏற்றிவந்த மினி டெம்போ எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி களமருதூர் கிராம ஏரியில் கவிழ்ந்தது. இதில் ஏற்பட்ட விபத்தில் மினி டெம்போவில் பயணம் செய்த ஜானகி, மகேஷ், மீனா, மணிமேகலை, அமுதா, பாலசுந்தரி, ராஜேந்திரன், கமலா, சாந்தா, நாவம்மாள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியாக வந்தவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.