தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் புதிதாக 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அது அமைப்பது தொடர்பாகவும் மேலும் 25 ஆரம்ப மற்றும் 25 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம்.
தமிழகத்தில் 32 இடங்களில் மருந்துக் கிடங்குகள் உள்ளன. புதியதாக ஐந்து மருந்துக் கிடங்குகள் கட்டுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் இந்தாண்டு 800 இடங்களில் நடத்தப்பட உள்ளன. மருத்துவத் துறையில் மொத்தமாக 4308 காலிப் பணியிடங்கள் இரண்டு மாத காலத்திற்குள் நிரப்பப்படும். நியூரோ அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக இரண்டு மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைத்தனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்துப் பேசி உள்ளோம். விரைவில் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும். தமிழ்நாட்டில் 1303 ‘108’ ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கினார்கள். ஆனால் அது தவறு. மருந்துத் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை தான் உள்ளது.
கொரோனா தடுப்பூசி 6.90 லட்சம் உள்ளது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்த வரவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் நிறுவனத்திற்கு இணையாக கட்டி வருகிறோம். ஒரு ஆண்டுக்குள் அது பயன்பாட்டிற்கு வரும். தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் 427 தான் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள். அதில் தான் 30 படுக்கைகள் வசதி இருக்கும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 30 படுக்கைகள் வசதி இல்லை” என்றார்.