கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தன் மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைத்துப்பாக்கியால் சுட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 25 குண்டுகளுடன் லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன் மனைவி கவிதா (40). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில் சிறிய துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 9 ஆம் தேதி கருக்காக்குறிச்சி தெற்கு தெருவிற்கு வந்த கவிதாவின் அக்கா கணவர் திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பாலசேகர் (50). மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் ஜவுளிக்கடை வைக்க கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை அதிகரித்ததால் பாலசேகர் தயாராக வைத்திருந்த 3 பெட்ரோல் குண்டுகளில் 2 குண்டுகளை எடுத்து கவிதா வீட்டில் வீச கூரைவீடு தீ பற்றி எரிந்தது. மற்றொரு பெட்ரோல் குண்டை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
வேகமாகப் பற்றிய தீயை அக்கம் பக்கத்தினர் அணைத்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலசேகர் தான் கொண்டு வந்திருந்த கை துப்பாக்கியை எடுத்து கவிதாவை நோக்கி சுட்டபோது இதைப் பார்த்த அப்பகுதி பெண் துப்பாக்கியை தட்டிவிட்டதால் கவிதா மீது துப்பாக்கி குண்டு பாயாமல் வேறு பக்கமாக போய்விட்டது. இதனால் கவிதா உயிர் தப்பினார். சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு விட்ட நிலையில் பாலசேகர் தனது நண்பருடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் திருச்சியிலிருந்த பாலசேகரை கைது செய்து அவரிடம் இருந்து 25 குண்டுகளுடன் லைசன்ஸ் இல்லாத கை துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், “நான் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதால் எனது மனைவியின் தங்கை கவிதா குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து வந்தேன். துணிக்கடையும் வைத்துக் கொடுத்தேன். ஆனால் கவிதா சரியாக நடந்து கொள்ளாததால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளில் பேசினார். அந்த ஆத்திரத்தில் தான் அன்றைய சம்பவம் நடந்தது. என்னிடம் வேலை செய்ய வந்த வடமாநிலத்தவர்கள் மூலம் துப்பாக்கி வாங்கினேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.