திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் உள்ளது செக் போஸ்ட் மேம்பாலம். இதற்கு அருகே உள்ள ஒட்டன்சத்திரம் அண்ணா நகர் செக்போஸ்ட் பகுதியில் வசித்து வந்தவர் பிரவீன். 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் அவரது நண்பர்களான நாகனம்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் நரிப்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன் ஆகிய இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மதுரையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி 41 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து மீது முன் பக்கமாக நேருக்கு நேர் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் இருசக்கர வாகனம் பேருந்தின் டீசல் டேங்க் பகுதியில் மோதியதில் பேருந்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது .பின்னர் பேருந்து முழுவதும் தீப்பற்றி முழுவதுமாக எரிய தொடங்கியது.
இதனால் சுதாரித்துக் கொண்டு பேருந்தில் வந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கி சென்றனர். தகவலறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே காயம் அடைந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.