Skip to main content

மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்! கி.வீரமணி அறிக்கை

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
Buffalo cow


 

மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மனிதர்களில்தான் வர்ணம் என்ற ஒன்றைத் திணித்துள்ளார்கள் என்று எண்ணவேண்டாம்.
 

மாடுகளிலும் பசு என்றால் உயர் வருணம்; எருமை என்றால் பஞ்சம - சூத்திர இனம் - பிறவியிலேயே அது கருப்பு என்ற நிலை இங்குண்டு.
 

அதனால்தான் பசுவை மட்டும் ‘கோமாதா’ என்று கொண்டாடுகிறார்கள் - தூக்கி நிறுத்துகிறார்கள்.


வருண பேதம் எங்கிருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டியவர்களாகவே மனிதநேயர்களான நாம்  உள்ளோம்.

இவ்வளவுக்கும் பசுவைவிட அதிக பால் கொடுக்கக்கூடியது எருமை மாடுதான். பசு மாட்டுப் பாலைவிட எருமை மாட்டின் பாலில்தான் கொழுப்புச் சத்து (7.8 விழுக்காடு) அதிகம்!
 

மேலை நாடுகளில் எருமை மாட்டு இறைச்சிக் குத்தான் கிராக்கி அதிகம்.
 

எருமை மாட்டுக்குள்ள தனிக் கூடுதல் சிறப்பு - ஒவ்வொரு நாளுக்கும் அதன் எடை 700 முதல் 1500 கிராம் வரை கூடும். 14 முதல் 18 மாதங்களில் 300 கிலோ என்ற எடையை அடைகிறது.
 

இந்த வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் எருமை மாடுகளை உதாசீனப் படுத்தும் போக்கு இந்தியாவில் மிகுந்து வருவதால், அதன் எண்ணிக்கை வீழ்ச்சி பெற்று வருகிறது.
 

இந்த நிலையில், வருண பேதம் காட்டி ஒதுக்கப் படும் - அதேநேரத்தில் மக்களுக்கும், நாட்டுக்கும், உடல் வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி இவற்றிற்கும் அதிகம் தேவைப்படும் எருமை மாட்டைப் போற்றும் வகையில் வரும் மாட்டுப் பொங்கல் அன்று (16.1.2019) தனியார் இடங்களில் (வாய்ப்புள்ள ஊர்களில்) எருமை மாட்டு ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கழகத் தோழர்களையும், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட பெருமக்களையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


வழக்கமான பொங்கல் வாழ்த்தோடு தனிச் சிறப்புடன் கறுப்பு மாட்டுப் பொங்கல் வாழ்த்தையும் சேர்த்துத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘செண்பகமே செண்பகமே....’ - மாட்டுக்காக நடந்த பாசப்போராட்டம்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

buffalo issue near Kattumannarkoil

 

எருமை மாட்டிற்காக  3 மணிநேரம் நடந்த பாசப்போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, வசித்து வருபவர் பழனிவேல். கூலித் தொழிலாளியான இவர் ஆடு,மாடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில், வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் பழனிவேல் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை, பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து பழனிவேலை போலீசார் அழைத்து விசாரித்தபோது, எருமை மாட்டைத் தனது உறவினர் ஒருவரிடம் இருந்து வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாகத் தெரிவித்தார். இதனால் செய்வதறியாது தவித்த போலீசார், இறுதியில் மாடு யாரிடம் பாசம் காட்டுகிறதோ அவருடன் மாடு அனுப்பி வைக்கப்படும் என்று கூறி டெஸ்ட் வைத்தனர். மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் குழப்பமடைந்தனர். அதன்பின் பழனிவேல் என்பவர் சைகை செய்த உடன், மாடு அவரின் பின்னாலே சென்றது. இறுதியில் மாட்டைப் பழனிவேலு உடன் அனுப்பி வைத்து இந்த விசித்திரமான புகாரை முடித்து வைத்தனர்.

 

 

Next Story

கேரளாவுக்கு கடத்தப்பட்ட எருமைகள்; தமிழக போலீசார் அதிரடி!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

buffalo shifted from andhra to kerala incident police action taken
மாதிரி படம்

 

ஆந்திராவிலிருந்து எருமைகளை சட்ட விரோதமாக அடி மாட்டிற்காக கேரள மாநிலத்திற்கு கடத்திச் சென்ற லாரியை  பறிமுதல் செய்துள்ளனர்.

 

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையிலிருந்து 30 எருமைகளை பொள்ளாச்சி சந்தை மூலம் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு அடிமாட்டிற்காக அனுப்புவதற்காக கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்  வாகனத்தை நிறுத்தி, வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தமிழக இந்து மக்கள் முன்னணி மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் 30 எருமை மாடுகளையும் மீட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

 

லாரியை பறிமுதல் செய்த போலீசார் எருமை மாடுகளை சட்டவிரோதமாக அடிமாட்டுக்கு அனுப்புவதற்காக உணவு, தண்ணீர் கொடுக்காமல் நெருக்கமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்து, கடத்திச் சென்ற குற்றத்திற்காக லாரியின் உரிமையாளர் ரோஸ் காளி நாயுடு, மாடுகளின் உரிமையாளர் சேகர் மற்றும் லாரி ஓட்டுநர் சேகர் ஆகிய மூவர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.