திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் - கோகிலா தம்பதியரின் மகள் 19 வயது மோனிஷா. இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் நவம்பர் 30 ஆம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு கல்லூரி பேருந்தில் வந்து இறங்கி வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த மோனிஷாவின் 13 வயதான சித்தி மகன், மோனிஷாவை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது இதனைப் பார்த்த வீட்டிற்கு வெளியே படுத்திருந்த பாட்டி பாப்பாத்தியம்மாள்(80) கூச்சலிட்டுள்ளார். அதனால் அவரையும் வெட்டிவிட்டுத் தப்பியுள்ளார். உடனே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். கல்லூரி மாணவியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கந்திலி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சித்தியுடன் வந்த அவரது மகன் 13 வயது சிறுவன் மோனிஷாவின் செல்போனை திருடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மோனிஷா, சிறுவன்தான் தனது செல்போனை திருடியதாக அனைவரிடமும் கூறி வந்ததாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தலை மற்றும் காது என இரண்டு இடங்களில் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியுள்ளான்.
செல்போன் மீதுள்ள ஆர்வத்தில் திருடியதைப் பார்த்த அக்காவிற்கு நடந்த விபரீதம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய சிறுவனைத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.