![bridge floods - Trapped devotees rescued!](http://image.nakkheeran.in/cdn/farfuture/etlmeLnBXi00XU0BX_wceL8jSCRAbbFkHndBokbghBU/1634399806/sites/default/files/inline-images/rain7885.jpg)
நெல்லை மாவட்டத்தின் களக்காடு அருகிலுள்ள திருக்குறுங்குடியின் மலைமீது நம்பி கோவில் உள்ளது. பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் விஷேசமாக இருக்கும். அதுசமயம் மலை மீது 5 கி.மீ. தொலைவிலுள்ள நம்பிகோவிலின் வழிபாட்டிற்காகப் பக்தர்கள் செல்வர்.
அதன் பொருட்டு வனத்துறையினர் பக்தர்கள் செல்லும் வகையில் மலைப்பாதையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதர நாட்களை விட புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் நம்பி பெருமாளை வழிபடும் பொருட்டு பக்தர்கள் அதிக அளவில் திரளுவதுண்டு.
![bridge floods - Trapped devotees rescued!](http://image.nakkheeran.in/cdn/farfuture/7nV_kRE_R03LohBrv4i1Vm0OSNocINaCYtAmVR7rcOs/1634399816/sites/default/files/inline-images/rain89999.jpg)
தற்போதைய கரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபாட்டிற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசால் தடை நீக்கப்பட்டதால் பக்தர்கள் ஆலய வழிபாட்டிற்காகச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக, அண்மை நாட்களாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், பக்தர்கள் வழக்கம் போல் வழிபாட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.
தற்போதைய புரட்டாசி சனி என்பதால் பக்தர்கள் இன்று (16/10/2021) காலை திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மலை மீது தொடர் மழை பெய்ததால் மலையில் வெள்ளப் பெருக்கெடுத்து மலைக் கோவிலுக்குச் செல்லும் கரப்பாற்றுப் பாலத்தையும் மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் சென்றிருக்கிறது. சனிக்கிழமையான இன்று (16/10/2021) காலை வழிபாடு நிமித்தம் சென்ற பக்தர்கள் தரையிறங்கிவிட்டனர். அதன் பின் சென்ற 50- க்கும் மேற்பட்டவர்கள் வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.
![bridge floods - Trapped devotees rescued!](http://image.nakkheeran.in/cdn/farfuture/tvLcZTT59-g4cGTpkY4480IdsJ5jyVvdtm-F512a1M8/1634399831/sites/default/files/inline-images/rain89000000.jpg)
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தவர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். வள்ளியூர், நாங்குநேரிப் பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படையினர் பாலத்தின் இருபக்கமும் பயிறு கட்டி அதன் மூலம் சுமார் 50- க்கும் மேற்பட்ட பக்தர்களை மீட்டனர். மதியம் ஒரு மணிக்குத் தொடங்கிய இந்த மீட்புப் பணி மாலை 05.00 மணி வரை நீடித்தது.
வருடம் தோறும் மழை வெள்ளம் செல்வதால் பக்தர்கள் ஆலயம் செல்ல முடியாமல் போகிறது. அதனால் கரப்பாற்றுப் பாலத்தை உயர்த்தியும் பாதைகளைச் சீரமைக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார் மாநில விவசாய சங்கத் தலைவரான பெரும்படையார்.
![eee](http://image.nakkheeran.in/cdn/farfuture/9p_pu4GA3XJR66cSvktNBSO-gMZFVaZgBVxUbUCiPws/1634399999/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_163.jpg)