Skip to main content

செல்பி மோகத்தால் வைகையாற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
செல்பி மோகத்தால் வைகையாற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!



மதுரை வைகையாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்கச் சென்றபோது, செல்பி எடுத்த சிறுவன் தண்ணீரில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தாராபுரம் அருகே தளவாய்ப்பட்டியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். 

இவர் மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்காக தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் மதுரைக்கு வந்திருந்தார். 

அவரது இளைய மகன், பழனியில் உள்ள தேவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஜெயசூர்யா, 

ஜம்புராபுரத்தைச் சேர்ந்த உறவினர் 19 வயது கோகுலகிருஷ்ணனுடன், வைகை ஆற்றில் இரண்டு நாட்களாக கரை புரண்டு ஓடும் தண்ணீரை வேடிக்கைப் பார்ப்பதற்காக சென்றபோது செல்பி எடுக்கும் போது தவறி விழுந்துள்ளனர்.

இதில் கோகுல கிருஷ்ணன் சுதாரித்து எழுந்து விட, ஜெயசூர்யா தண்ணீர் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக கரையோரம் போடப்பட்டிருக்கும் சிறு பாலத்தின் உள்ளே சிக்கிய ஜெயசூர்யா வெளியே வரமுடியாமல் கதறியுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் தகவல் தெரிவிக்க, தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுவனை மீட்க கடந்த ஒரு மணி நேரமாகப் போராடியும் மீட்கமுடியாமல் போனது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஜெயசூர்யா சடலமாக மீட்கப்பட்டார். 

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக இரு நாட்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், மதுரை நகரில் வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடுகிறது. விழாவிற்காக வந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- சாகுல்

சார்ந்த செய்திகள்