சேலம் மாவட்டத்தில், பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, சடலத்தை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். சேலம் மாநகராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலரான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்தார்.
குமாரசாமிப்பட்டியில் அவருக்குச் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தேஜ் மண்டல் (வயது 26) என்ற பெண் அழகுக்கலை நிபுணர் (பியூட்டிஷியன்), அடுத்தடுத்து இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து இருந்தார்.
ஒரு வீட்டில், தான் மட்டும் தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீட்டில், தன்னுடைய அழகுநிலையத்தில் வேலை செய்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண், ஒரு ஆண் ஆகிய மூவரையும் தங்க வைத்திருந்தார்.
தேஜ் மண்டலுக்கு, சேலம் மாவட்டம், அழகாபுரம், பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய மூன்று இடங்களில் தேஜ் அழகுநிலையம் மற்றும் ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன.
தேஜ் மண்டலின் வீட்டுக்கு, சேலம் மாவட்டம் ஆத்துரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவர் தன்னை, தேஜ் மண்டலின் கணவர் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 15) மாலை பிரதாப், வீட்டு உரிமையாளரான நடேசனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தேஜ் மண்டலை பலமுறை அழைத்தும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. என்ன நடந்தது என்று வீட்டில் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் நடேசன், தேஜ் மண்டல் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதேநேரம் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, உதவி ஆணையர் ஆல்பர்ட், ஆஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் மகேஷ்வரி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். படுக்கை அறையில் உள்ள சிமெண்ட் அலமாரியில் ஒரு சூட்கேஸ் இருப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசும் நிலையில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
அந்த பெட்டியை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் அரை நிர்வாண நிலையில் தேஜ் மண்டல் சடலமாக, கை, கால்களை மடக்கி, அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சடலம் அழுகி இருந்தது. இதன்மூலம் அவர் இறந்து 72 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் எனத்தெரிகிறது.
மர்ம நபர்கள் அவரை கொன்றுவிட்டு, சடலத்தை எடுத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால் துணிகளை எடுத்துச் செல்லும் பெட்டிக்குள் அடைத்துவிட்டு தப்பி ஓடியிருப்பது தெரிய வந்துள்ளது.
காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் சில தடயங்கள், விரல் ரேகை பதிவுகளைச் சேகரித்தனர்.
தேஜ் மண்டலின் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்த அவருடைய ஊழியர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை. வீடும் பூட்டப்பட்டுக் கிடந்தது. அவர்களின் அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டபோது, மூன்று ஊழியர்களின் அலைபேசிகளும் சொல்லி வைத்தாற்போல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த விதம் குறித்தும் இன்னும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தேஜ் மண்டல் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
சடலம் கைப்பற்றப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு தேஜ் மண்டல் வீட்டுக்கு, அவருடைய அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்துள்ளனர். அவருடைய வீட்டில் இருந்து சுமார் அரை மணி நேரம் கழித்து வெளியேறியுள்ளனர். போகும்போது, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகுதான் தேஜ் மண்டலும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதன்மூலம் அந்த ஊழியர்கள் இருவரும்தான் அவரை கொலை செய்திருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்து மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பிரதாப்பிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர் தேஜ் மண்டலின் கணவர் இல்லை என்பதும், ஆனால் இருவருக்கும் கணவன், மனைவி போல கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்திருப்பதும் தெரிய வந்தது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரதாப் வேலை செய்து வருகிறார். அவரை நேரில் வரவழைத்து விசாரித்தனர். கடந்த சில மாதங்களாகத்தான் பிரதாப்பும், தேஜ் மண்டலும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்ததை அடுத்து பிரதாப் சென்னைக்குச் சென்றுவிட்டதும், தினமும் இரவில் அலைபேசியில் பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் கடந்த 5 நாள்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் விசாரணையின்போது பிரதாப் தெரிவித்துள்ளார்.
பிரதாப் அளித்த தகவல்கள் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் சேலம் மாநகரில் மசாஜ் மையங்களில் விபச்சாரத் தொழில் செய்ததாக சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த பெண்கள் சிலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவரிடம் காவல்துறையினர் அப்போது விசாரித்தபோது, சேலத்தில் விபச்சாரத் தொழில் நடக்கும் வேறு சில மசாஜ் மையங்களின் விவரங்களையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடைய தகவலின்பேரில் சிலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தேஜ் மண்டல் கொல்லப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தனிப்படை காவலர்கள் சிலர், தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த ஊழியர்களைத் தேடி பெங்களூருவுக்கும் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.