கோடியக்கரை கடற்பகுதியில் அவசரக் காலத்தில் பயன்படுத்தப்படும் துடுப்புகளுடன் கூடிய ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு கடற்பகுதி வழியாக கடத்தல் நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தங்கம் கடத்தல் ஜரூராக இருந்து வந்தது. தற்போது தங்கம் கடத்தல் குறைந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலே அதிகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து கள்ளத்தோனி மூலம் தமிழகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது ஆங்காங்கே பிடிபட்டு சிறையில் அடைபடுவதைக் கண்டு அப்படிப்பட்ட சம்பவங்களும் குறைந்துள்ளன.
இந்த நிலையில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று கோடியக்காட்டு கடற்பகுதியில் கரை ஒதுங்கியது. அதில் வந்தவர்கள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் வனப்பகுதிக்குள் மோப்பநாய் மற்றும் ட்ரோன் மூலம் தேடுதல் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆறுகாட்டுதுறை கடற்கரை வழியே மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஒரு நபர் செல்லுவதை கண்டுபிடித்து மீனவர்கள் உதவியோடு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், போலந்து நாட்டை சேர்ந்த வாத்தீஸ்வாப் என தெரியவந்தது. கடந்த 2019 இலங்கை சுற்றுலா விசாவில் வந்த அவர், அங்கு சிலரிடம் மோதல் ஏற்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசாவை முடக்கப்பட்டு சிறையில் இருந்தவர். பின்னர் வெளியே வந்ததும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் மீண்டும் பல்வேறு வழக்குகள் பதிவாகி மீண்டும் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்தியா வழியாக சொந்த நாட்டுக்கு திரும்பும் எண்ணத்துடன் ஒரு லட்சம் கொடுத்து ரப்பர் படகுவங்கி, செல்போன் சிக்னல் மூலம் வந்ததாக போலீசாரிடம் வாத்தீஸ்வாப் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை புதுடில்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.