கரோனோ நோய்த் தொற்றை தொடர்ந்து கருப்பு, வெள்ளை, மஞ்சள் போன்ற பூஞ்சை நோய்கள் நாடு முழுவதும் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் இருவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவர் என 3 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் வேப்பூர் அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(50) என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து, முகம், கை, கால்கள் கருப்பு நிறமாக மாறி கண்களில் வீக்கம் அதிகரித்தது. அதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்து, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அதேபோன்று கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த சேத்தியாதோப்பை சேர்ந்த கண்ணன்(54) என்பவருக்கு கருப்பு பூஞ்சை இருந்ததையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்து, சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடியை சேர்ந்த ராஜேஸ்வரி(54) என்பவர் கடந்த 10-ஆம் தேதி கரோனோ அறிகுறியுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கருப்பை புபூஞ்சைநோய் தாக்கியது. இருப்பினும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அப்பெண் உயிரிழந்தார். கரோனாவுடன் கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.