மின் கட்டணம் சரிவர செலுத்தாத நாகை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தின் மின் இணைப்பை துண்டித்ததால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்திற்கு பா.ஜ.க.வினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், வெளிப்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் பா.ஜ.க.வின் மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அங்கிருந்த ஃபீஸ் கேரியரை எடுத்துச் சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.கவினர் வெளிப்பாளையம் துணை மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதோடு அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
பா.ஜ.கவினரின் முற்றுகையால் தினசரி பணிகளான மின்கட்டணம் கட்டும் பணிகளும் பாதிக்கபட்டதுடன், அங்கு பரபரப்பும் நிலவியது.
பிறகு மின் பகிர்மான மேற்பார்வையாளர் அருள், தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பா.ஜ.க.வினரோ, “மின் இணைப்பை துண்டித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அதிகாரிகளோ, “கட்டவேண்டிய மின்கட்டணத்தை விரைந்து செலுத்துங்க அப்புறம் மற்றதைப் பேசலாம்” எனத் தெரிவித்துள்ளார்.