Skip to main content

கரூரில் சுவர் விளம்பரம் எழுதுவதில் பாஜக, திமுக இடையே மோதல்

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

BJP, DMK clash over writing wall advertisement in Karur!

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். வளாகத்தின் வெளியே உள்ள சுவற்றில் திமுக மற்றும் பாஜகவினர் கட்சி விளம்பரம் எழுதுவதற்காக ஒரே இடத்தில் கூடியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

 

விளம்பரம், வால்போஸ்டர் ஒட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் சமீப காலமாக கட்சி வால் போஸ்டர்கள் அப்பகுதியில் ஒட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சுவர் விளம்பரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் படங்கள் சுவர் விளம்பரமாக வரையப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் திமுக நிர்வாகிகள் உத்தரவிற்கிணங்க சுவர் விளம்பரம் எழுதும் ஆட்கள் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் விளம்பரத்தை அழித்துவிட்டு திமுக விளம்பரத்தை வரையத் தொடங்கி உள்ளனர்.

 

BJP, DMK clash over writing wall advertisement in Karur!

 

இதனை அவ்வழியாக வந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பார்த்துவிட்டு சுவர் விளம்பரம் வரைந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இந்த தகவல் திமுக நிர்வாகிகளுக்கு பரவ அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். இந்நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்த நிலையில் திமுக, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பெருமளவில் அங்கு திரண்டனர்.

 

இந்நிலையில் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது அருகில் பாஜக நிர்வாகி ஒருவரிடம் இருந்து செல்போனை திமுக நிர்வாகிகள் பறித்துக் கொண்டதாகக் கூறி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த திமுக நிர்வாகிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து இருதரப்பினரும் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சுவற்றில் திமுக நிர்வாகிகள் அவர்கள் விளம்பரத்தை வரைந்து விட்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்