தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவி வருவதை தடுக்க பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்டம் வாரியாக செயல்படுத்திட திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 14 மாவட்டங்களை கண்காணிக்க அமைச்சர்களை பொறுப்பாளா்களாகப நியமித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், தேவைப்படும் உதவிகளை செய்யவும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் எந்த அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினா்களுக்கும் வரவேற்பு பதாகைகள் வைக்க கூடாது, அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவிப்பது, மலர்கொத்து கொடுப்பது உள்ளிட்டவற்றை தொண்டா்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
குறிப்பாக அந்தந்த தொகுதிகளில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வரவேற்பு பதாகைகள் வைக்க கூடாது என்று அறிவுரை கூற வேண்டும் என்றும், தற்போது தமிழகத்தில் நாம் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும். எனவே ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் மக்களை காப்பாற்றும் பெரும் பொறுப்பு உள்ளது. நமது செயல்கள் தான் மக்களின் மனதில் நிற்கும் வாக்களித்து நம்மை வெற்றி பெற செய்பவர்களுக்கு நாம் உதவி செய்திட நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பதாகைகள் தான், அனைத்து முக்கிய சாலைகளிலும் இடம்பெற்று இருக்கும் இந்த வரவேற்பு பதாகைகள் எப்போது அகற்றப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது. முதல்வரின் கடிதத்திற்கு பிறகும் இந்த பதாகைகள் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக பதாகைகளை அகற்றிட அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? திமுக தலைமை கவனத்தில் எட்டுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.