காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாரம்பரியமான அரசியல் குடும்ப பின்புலத்தைக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் உள்ளிட்டு பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர். அரசியல் நிலைபாடுகளில் தனது கருத்துக்களை பளீச்சென்று பேசும் துணிச்சல் மிக்க அரசியல்வாதி. தோழமைக் கட்சிகளுடன் நெருக்கமாகவும் மனம் விட்டு பேசும் பண்பாளர். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.