தேனி மாவட்டத்தில், போடி தொகுதியில் இருக்கும் உப்புக்கோட்டை, காமராஜபுரம் பகுதியில் வசித்துவருபவர் குமரேசன். இவரது மனைவி பெயர் அம்சவேணி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் விருப்பம். அதன் அடிப்படையில்தான் தங்கள் வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர்டாக், சிப்பிபாறை என பல நாய்களை வளர்த்துவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய ஒரு பெண் நாயை எடுத்து அரவணைத்து வளர்த்துவந்தனர். அந்தப் பெண் நாய்க்கு ‘சில்க் ஸ்மிதா’ என பெயரிட்டு வளர்த்துவந்தனர். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றதை அடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தினார்கள். அந்த நாய்க்குப் பிடித்த எலுமிச்சை, புலி, தயிர்சாதம், பொங்கல், கேசரி என ஐந்து வகையான உணவுகளை வினோதமாக சமைத்து வழங்கினார்கள். அதோடு புதுசேலை கட்டி, மாலை அணிவித்து, கால்களில் வளையல்களை மாட்டி, முகத்தில் சந்தனம், குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தினார்கள்.
இது சம்பந்தமாக குமரேசனின் மகன் கூறும்போது, “நன்றி மறவாத இனம் என்றால் அது நாய்கள்தான். அதனால்தான், பலவகையான நாய்களை வளர்த்துவருகிறோம். அதுபோலதான், அதற்கு வளைகாப்பு நடத்தி மரியாதை செய்துள்ளோம்” என்று கூறினார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.