அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு மரபு வகை அரிசிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் அருங்கால் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர் முத்துப்பாண்டியன், வெற்றியூர் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அன்பு சந்திரன், வெற்றியூர் கிராம விவசாய சங்க நிர்வாகி காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜெனீவா நீதிமன்றம் வரை சென்று வாதாடி வேப்பமரத்திற்கு அமெரிக்கா பெற்ற காப்புரிமையை ரத்து செய்து நம்மாழ்வார் மீட்டுத் தந்த வேப்பமரத்தின் இலையைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து நமது முன்னோர்கள் அம்மை நோயை வேப்பிலையை வைத்து விரட்டியதை நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மரபு வகை அரிசிகளின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அப்போது பூங்கார் அரிசி, பெண்களின் கருப்பையை வளர்ச்சி அடையவும், தாய்ப்பாலை சுரக்க வைப்பதிலும் மாதவிடாய் கோளாறுகளைப் போக்கவல்லது என்றும் மாப்பிள்ளை சம்பா அரிசியை உண்பதால் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் குணமாவதோடு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கவல்லது என்றும் முன்னோர்கள் திருமணத்திற்கு முன்பு ஓரிரு மாதங்கள் தொடர்ந்து மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு வகைகளை தயாரித்து வழங்கியதனையும் நினைவுகூர்ந்தார். மேலும் மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் சாப்பிட்ட உணவுவகையான கருப்புக்கவுனி அரிசியை உண்பதனால் நலிவுற்ற உடல் தேறும். அதோடு உடலில் செல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படுவதோடு கேன்சர் உள்ளிட்ட வெப்ப நோய்களை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்தது. மேலும் நார்ச்சத்துக்கள் அதிகமுடையது எனவும் வயோதிகம் காரணமாக ஏற்படும் செரிமான தொந்தரவுகளைச் சரி செய்வதில் மரபு வகை ரகங்கள் பெரும் பங்கு வகிப்பதாகக் கிராம இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மரபுவகை வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் ஏர்கலப்பை மற்றும் பசு மாடு, ஆடு உள்ளிட்டவையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.