சென்னை அயனாவரம் மேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜதேவநாத் (21). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடை ஒன்றை நடத்தி வந்தார். நேற்று இரவு சுமார் எட்டு மணியளவில் கடையில் தனியாக இருந்த பொழுது வாடிக்கையாளர் போல் இரு நபர்கள் வந்தனர். சிமெண்ட் வேண்டும் எனக் கூறி பேசியுள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சு ராஜதேவநாத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சுதாரிப்பதற்குள் அந்த இரண்டு நபர்களும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கோடாரியால் அவரை தாக்க முற்பட்டனர்.
ராஜதேவநாத் சுதாரித்துக் கொண்டு எழுந்து தாக்க, வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனடியாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தாக்க வந்த இரு நபர்களும் கடையிலேயே விட்டுச் சென்ற செல்போன் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கோடாரி ஆகியற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்தனர்.
விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் என்ற நபர் மற்றொரு நபருடன் வந்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக செந்திலை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்து பிரச்சனையில் ராஜதேவநாத்தின் அப்பா மற்றும் அக்காவை ஹரிநாத் கத்தியால் வெட்டிய வழக்கில் ராஜதேவநாத்தின் தாயார் பொன்னி இன்று சாட்சியமாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருக்கிறார். இந்நிலையில், இவரை கொலை செய்தால் அவரது தாய் சாட்சியம் அளிக்க வரமாட்டார் என்பதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செந்தில், கூலிப்படையை ஏற்பாடு செய்த விக்னேஷ், மூளையாக செயல்பட்ட ஹரிநாத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.