புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடசேரிப்பட்டி கிராமத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.44 கோடி மதிப்பில் 528 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிராம ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அனுமதி தீர்மானம் போடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை ஒப்பந்ததாரர் தரப்பு போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் பொக்லைன், டிப்பர் லாரிகளுடன் வந்திருப்பதை அறிந்து அங்கு கூடிய மக்கள் எங்கள் ஊரில் உள்ள பொது இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்று வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் மக்கள் சாலை மறியல் செய்யச் சென்றபோது பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கியது.
இதைப்பார்த்த கிராம மக்கள் பள்ளங்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலைவரை போராட்டம் தொடர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் ஊரில் யாருக்கோ வீடுகட்டிக் கொடுக்க பினாமியாக டெண்டர் எடுத்து வந்திருக்கிறார். இது எங்கள் ஊர் மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள நிலம். இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவிடமாட்டோம் என்றனர் ஆவேசமாக.
மேலும் இந்த இடத்தில் பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர்ந்து இரவிலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டம் செய்து வருகின்றனர்.