ஏடிஎம்மில் கொள்ளையடிக்க சென்ற நபர் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் ஒன் இந்தியா ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றிருந்த பொழுது அந்த ஏடிஎம் உள்ள அறைக்குள் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது சுவரோடு வைத்திருந்த ஏடிஎம் இயந்திரத்தின் பின்பக்கத்தை உடைத்த ஒரு மர்ம நபர் இயந்திரத்தின் உள்ளே இறங்கி பணத்தை திருட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வெளியே வரும்படி சத்தமிட, ஓட முடியாமல் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன் இயந்திரத்தில் இருந்து வெளியே தலைகாட்டினான். அந்த நபர் சிக்கிக்கொண்டதை வீடியோவாக பதிவு செய்துகொண்ட போலீசார், வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர ராய் என்பது தெரியவந்தது. மோகனூர் அருகே உள்ள தனியார் கோழி தீவன ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்ததும், சில நேரத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தில் அந்த நபர் சிக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் 'இது புது ரகம்' உள்ளிட்ட கேலியான தலைப்புகளில் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.