கள்ளக்குறிச்சி மாவட்டம், கிழக்கு காட்டுக்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி, சித்ரா தம்பதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில், மூத்த மகன் கோவிந்தன் மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இளைய மகன் கோபி திருமணம் செய்து 5 வருடங்கள் ஆகின்றன. சித்ராவிற்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில், மூத்த மகன் இறப்பிற்கு பிறகு, அந்த நிலத்தில் தனது மகளுக்கு பங்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். இதற்கு அவரது இளைய மகன் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராற்றில் கோபியின் மனைவி சித்ராவின் சகோதரி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இதனால் கோபி, தனது தாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் கோபியின் தாய் சித்ரா வெளியே சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரது மகன் கோபி, தாயை வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் அவர், தாய் சித்ராவை எட்டி உதைத்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து, ‘நீ செத்தால் தான் சொத்தில் யாருக்கும் பங்கு கிடைக்காது. நீ உயிரோடு இருந்தால் சொத்தை மகளுக்கு பங்கு பிரித்து கொடுத்து விடுவாய்’ என்று ஆத்திரத்துடன் கத்தியபடி அவர் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் சித்ராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள், உடனடியாக சித்ராவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்ராவின் மகன் கோபியை கைது செய்துள்ளனர்.