திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் நேற்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு 'இந்தியாவில் இதுபோன்ற போலி செய்திகளைப் பரப்புவது இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்' என தெரிவித்திருந்தார். தமிழக டிஜிபி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை வந்திருந்தது. அதில் இதுபோன்ற போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் பிஜேபியின் டிவிட்டர் பக்கத்தை கையாளும் பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில், 'திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் காரணம். திமுக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கை அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்' என தெரிவித்துள்ளார்.
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) March 5, 2023
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். pic.twitter.com/yLtf9LNfAH