அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியின் மகள், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிருத்துவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். தற்போது +2 படிக்கும் நிலையில் கடந்த 9ந் தேதி விடுதியில் இருந்த களைக்கொல்லி விஷத்தை குடித்து வாந்தி எடுத்திருக்கிறார்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக 15 ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மாணவி இறப்பதற்கு முன்பு கொடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனிப்பட்ட நபர் ஒருவர் தனக்கு வேலை பளு அதிகம் கொடுத்ததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், படிப்பு பாதிக்கப்பட காரணமாக அமைந்ததால் விஷம் அருந்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் செய்த பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மமக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், மாணவி வழக்கை சிபிஜ-க்கு மாற்ற வேண்டும், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.