
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் வெளுத்து வாங்கியது. அதிகளவு பெய்த மழையின் காரணமாக மணப்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

அதிக மழை காரணமாக அப்பையர் குளம் உடைந்ததில் அருகில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தது. இந்திரா நகர், ராஜு நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மணப்பாறை பேருந்து நிலைய சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.