கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது திருநாவலூர். இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல்கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அவியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது வயலில் விளைந்த 600 மூட்டை நெல்லை திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தார். இதுகுறித்து கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரனிடம் தமது நெல்லை விலைக்கு எடைபோடுவது சம்பந்தமாக கேட்டுள்ளார்.
அதற்கு குணசேகரன் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வீதம் 600 முட்டைக்கும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதற்கு முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் பணத்தைகொடுத்துள்ளார் ஏழுமலை. மேலும் 20 ஆயிரம் பணம் கேட்டு குணசேகரன் நச்சரிப்பு செய்து வந்துள்ளார். இதனால் மனம் வேதனைப்பட்ட ஏழுமலை இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பெயரில் ரசாயனம் தடவிய பணம் இருபத்தி இரண்டாயிரத்தை குணசேகர் இடம் ஏழுமலை கொள்முதல் நிலைய வளாகத்தில் வைத்துகொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக குணசேகரனை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறைக்கு கொண்டு அடைத்துள்ளனர்.