தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், சென்னை வண்டலூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு சிங்கம் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து, அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூரில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள ஊழியர்கள், அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நீலா என்ற பெண் சிங்கம் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், கரோனா தொற்றுக்கு உள்ளான 8 சிங்கங்களும் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் கரோனா காரணமாக இறந்துள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 13 வயதேயான கவிதா என்ற பெண் சிங்கம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வண்டலூர் பூங்கா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.