வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி. இந்த நாளில் நடிகர் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கான கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இப்போதே இறங்கியது ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்திய சினிமாவில் ரஜினி காலத்திய (1970) நாயக நடிகர்கள் எல்லாம் நாயகன் என்கிற இடத்திலிருந்து அப்பா, அண்ணன், தாத்தா என குணச்சித்திர வேடங்களுக்கு மாறிப்போய்விட்டார்கள். ஆனால் ரஜினி இன்னமும் மாஸ் ஹீரோவாக திரைத்துறையில் கோலோச்சுகிறார். அவரின் சம்பளம் மட்டுமே 100 கோடி சொச்சம் எனச்சொல்லப்படுகிறது. ரஜினியின் திரைப்படங்கள் எல்லாம் 500 கோடிக்கு மேலான வியாபார பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஜினியின் 168வது படமான அண்ணாத்த படமும் 500 கோடி வியாபார படம் எனச்சொல்லப்படுகிறது. ரஜினியின் இந்த உயர்வுகளுக்குப் பின்னால் ரசிகர்களுக்கு மிகமிக முக்கிய இடமுண்டு.
இந்தாண்டு தொடக்கம்வரை தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிய கொண்டாட்ட மனநிலையிலிருந்தனர். அதற்குக் காரணம், கடந்த 25 ஆண்டுகாலமாக ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ரஜினி அரசியலுக்கு வருகிறார் எனச்சொல்லப்பட்டு, பேசப்பட்டுப் பரபரப்பு கூட்டப்பட்டே வந்தது. 2018ல் போர் (தேர்தல்) வரும்போது களத்துக்கு வருகிறேன் என அறிவித்தார் ரஜினி. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டமன்றமே இலக்கு என்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குச் சிலமாதங்களுக்கு முன்பு, கட்சி தொடங்கப்படும், கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பு தளத்திலிருந்த சில பணியாளர்களுக்கு கரோனா வந்தது. ரஜினியும் திடீரென உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார்.
சென்னை திரும்பியதும் கரோனா, தனது உடல்நிலை குறித்து நீண்ட விளக்கம் தந்து அரசியல்கட்சி இப்போது மட்டுமல்ல எப்போதும்மில்லை என அறிவித்தார். அறிவித்ததோடு நிற்காமல் தனது ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு அது இனி ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். அப்படி அவர் அறிவித்தபோது, ரஜினியின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், சில மாவட்ட நிர்வாகிகள் வேறுகட்சிகளுக்குச்சென்று தங்களை இணைத்துக்கொண்டார்கள். என் ரசிகர்கள் எந்தக்கட்சிக்குப் போனாலும் அவர்கள் என் ரசிகர்களே என அறிவித்தார். இனி ரஜினி அவ்வளவுதான், அவரின் படங்கள் ஓடாது, ரசிகர்கள் யாரும் அவரது படங்களைக் கொண்டாடமாட்டார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்கள், கருத்துக்களையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரசிகர்கள் என்றும் ரஜினி பக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர்.
சோளிங்கர் நகரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் அண்ணாத்த படம் வெளியீட்டு விழா பிரச்சார கொண்டாட்டத்தைத் துவங்கியுள்ளனர். தனியார் மண்டபத்தில் நடந்த இந்தநிகழ்வில் சுமார் நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொண்டு அண்ணாத்த பட ஸ்டில் தாங்கிய அண்ணாத்த செல்ஃபி பூத் என ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். அதன் முன் நின்று ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி நம்மிடம், ''வேலூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்மந்தப்பட்ட துறையில் முறையாக அனுமதி வாங்கி அண்ணாத்த செல்ஃபி பூத் வைக்கவுள்ளோம். ரசிகர்கள், பொதுமக்கள் அண்ணாத்த படம் குறித்த தகவல்களை அங்கு தெரிந்துகொள்வதோடு, அண்ணாத்த படத்தின் ஸ்டில்ஸ்களோடு யார் வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் வேறு சில திட்டங்களும் உள்ளன. வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க மக்களிடம் தலைவரின் படத்தை கொண்டுச்சென்று சேர்க்க ரசிகர்களான நாங்கள் முடிவு செய்துள்ளோம், இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்'' என்றார்.
ரஜினி படங்களில் இடம்பெறும் ரஜினியின் மேனாரிஸங்களைப்போலவே அவரின் ரசிகர்களும் வித்தியாசமானவர்களாகவே உள்ளார்கள்.