
சென்னை அண்ணாநகரில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் ராபர்ட். அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த ராபர்ட், சஞ்சனா என்று திருநங்கையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இருண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி வீட்டுக்கு வந்த ஆறு நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ரவுடி ராபர்ட்டை வெட்டினர். ராபர்டின் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள் ஆறு பேரும் தப்பிச் சென்றனர்.
தடுக்க சென்றவர்களையும் அந்த கும்பல் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த ராபர்ட்டை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் ரவுடி ராபர்ட் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை ஈடுபட்டது அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி லோகு என்பவனின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. ரவுடி ராபர்ட்டிற்கும் லோகுவிற்கும் இடையே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஐந்து வருடமாக தகராறு இருந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதே நேரம் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரும் இன்ஸ்டால் போஸ்ட் போட்டு கொண்டாடியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.