சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பணி நிரவலுக்கு சென்று 5 ஆண்டுகளை கடந்தும் பணியாளர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ள வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் திங்களன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் பணிநிரவல் பணிக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சுழற்சி முறையில் பணியாளர்களை பணி நிரவல் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் பெண் பணியாளர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்மொழிந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோசங்களை எழுப்பினார்கள். இவர்களின் போராட்டம் மே 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் பணிக்கு சென்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.