அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்தலில் முதல்வரின் ஆசிபெற்ற வேட்பாளர்கள் படுதோல்வி என்று நக்கீரன் இணையத்தில் கடந்த 23-ந்தேதி செய்தி கட்டுரை படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த 3-ம் எண் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.ஜி மனோகர், இணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரஞ்சித் என்பவர் செய்தி குறித்து நம்மிடம் பேசுகையில், எங்கள் அணியினர் 50 வாக்கிலிருந்து 250 வாக்கு வித்தியாசத்தில் 1-ம் எண் அணியினரிடம் குறைந்த வாக்கில் தோல்வி அடைந்துள்ளார்கள்.
அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உறுப்பினராக இருந்தார்கள். அவர்களில் அயற்பணியிடம் சென்ற 4 ஆயிரம் உறுப்பினர்களை ஓட்டுபோடாத வகையில் தற்போது வெற்றிபெற்றுள்ள அணியினர் செய்துவிட்டனர். தேர்தலை அரசு விடுமுறை நாட்களில் வைக்காததால் 5340 உறுப்பினர்களில் 4431 உறுப்பினர்கள் மட்டும் வாக்கு அளித்துள்ளனர். அவர்கள் வாக்கு அளித்து இருந்தால் நாங்க தான் வெற்றிபெற்று இருப்போம்.
இது அரசு பல்கலைக்கழகம். ஆதலால் முதல்வரிடம் ஆசி பெற்றோம். முருகையன் கடந்த தேர்தலில் தற்போது 1ம் எண் அணியில் வெற்றிபெற்ற மனோகரன் அணிக்கு வாக்கு சேகரித்தார். அந்த அணியும் வெற்றிபெற்றது. அதேபோல் தான் எங்களுக்கு வாக்குசேகரித்தார் என்று கூறினார்கள்.
தற்போது ஊழியர் சங்க தலைவராக 1-ம் எண் அணியில் வெற்றிபெற்றுள்ள மனோகரனிடம் பேசுகையில் நீதிமன்ற உத்திரவுபடியும், நீதிபதியின் முன்னிலையில் தான் தேர்தல் நடந்தது. எங்கள் அணியினருக்கு தேர்தல் நடக்கும் முதல் நாள் வரை மிரட்டல்கள் வந்துகொண்டு இருந்தது. இதனை வெளியில் சொன்னால் தேர்தலுக்கு ஆபத்து ஆகிவிடுமோ என்று முடிந்தவரை சமாளித்து தேர்தலில் ஜனநாயக முறையில் வெற்றிபெற்று ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளோம் என்றார்.