Skip to main content

"உண்மையிலேயே முதல்வர் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு தான் ஆட்சி நடத்துகிறாரா?" - அண்ணாமலை பேச்சு!

Published on 19/05/2022 | Edited on 20/05/2022

 

annamalai pressmeet about perarivalan release

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளனை விடுவித்து நேற்று தீர்ப்பளித்தது. மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தாங்களே விடுதலை செய்வதாக அறிவித்தது. 

 

பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வரும் நிலையில், இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, "உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இவ்வளவு ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, அவரது நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக அவர் நிரபராதி அல்ல, அவரும் குற்றவாளிதான். ஆனால், திமுக அரசு அவரை நிரபராதிபோல கொண்டாடுகிறது. 

 

முதல்வர், அமைச்சர்கள் அனைவரும், ஒரு நிரபராதியை விடுதலை செய்வது போல கொண்டாடுவது, பேசுவது எல்லாம், உண்மையில் முதல்வர் அரசியலைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு தான் ஆட்சி நடத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். முன்னாள் பிரதமர் கொலையில் அவரது குற்றம் பலமுறை உறுதி செய்யப்பட்டுதான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தாது.

 

திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. நளினியின் தண்டனையைக் குறைக்க சோனியா காந்தி உதவியது, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டோம் என்று பிரியங்கா காந்தி கூறியது, இப்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக கே.எஸ்.அழகிரி போராட்டம் அறிவிப்பது என அவர்களது கொள்கை ஒன்றுக்கொன்று மாறாக இருக்கிறது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தும் காங்கிரஸ், தைரியம் இருந்தால், திமுக அரசுக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெறட்டும்' என்று பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்