தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (13.09.2021) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் பதிவுசெய்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக கருத்தை பதிவு செய்துள்ளார். நீட் தொடர்பாக அவர் பேசியதாவது, "தற்போது தமிழக சட்டமன்றத்தில் நீட் தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வை வைத்து பாஜ அரசியல் செய்ய விரும்பவில்லை.
எனவே நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். கடந்த 2010ஆம் ஆண்டு நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி. எனவே தற்போது இவர்கள் அதனை எதிர்ப்பது வியப்பாக உள்ளது. நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதை இவர்கள் விரும்புவதில்லை. இவர்கள் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து இவர்களே தற்போது பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்கள். திமுக தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வு தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும். எனவே, மாணவர்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை" என்றார்.