/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VICE.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (29/05/2021) காலமானார். அவருக்கு வயது 93.
இவர் ஐ.ஐ.டி. கான்பூர் தலைவராகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டுமுறை சிறப்பாகச் செயல்பட்டவர் அனந்தகிருஷ்ணன்.பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர நடைமுறைக்கு காரணமானவர் அனந்தகிருஷ்ணன். கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் முயற்சி செய்து வெற்றிபெற்றவர்களில் இவரும் ஒருவர். தமிழில் எழுதும்போது தனது பெயரை ஆனந்தகிருட்டிணன் என்றுதான் அழைக்க வேண்டும் எனச் சொல்வார்.
முன்னாள் துணை வேந்தர் மறைவுக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள திமுகஎம்.பி. கனிமொழி, "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி. கான்பூர் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றபோதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். தலைவர் கலைஞர் பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)