அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (29/05/2021) காலமானார். அவருக்கு வயது 93.
இவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான மு. அனந்தகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வாணியம்பாடியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் பயின்ற அனந்தகிருஷ்ணன் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்றதுடன், கல்வியளராகவும் திகழ்ந்தார். ஐ.நா வின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர், ஐ.நா. அறிவியல் - தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் செயலர் உள்ளிட்ட பன்னாட்டு பதவிகளை வகித்தவர்.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடிவந்த நிலையில், அது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான அனந்தகிருஷ்ணன், நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். பொறியியல் மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்த பெருமையும் முனைவர் அனந்தகிருஷ்ணனையே சாரும்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி கடைப்பிடிக்கும் சமூகநீதி கொள்கைகளை ஆதரித்தவர்; பாராட்டியவர். டி.எம்.ஏ பாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாத சூழல் ஏற்பட்டபோது, அதை மாற்றுவதற்காக பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட மாதிரி சட்டத்தை தயாரித்த குழுவில் முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்களும் இடம்பெற்றிருந்தார். அந்த மாதிரி சட்டம்தான் பின்னாளில் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்படுவதற்கும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது. அந்த வகையில் பாமகவின் சமூகநீதி பயணத்தில் அனந்த கிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றுள்ளார்.
முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.