2021- ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகளைக் காணொளியில் வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் பொருளாளரும், தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பெரியார் விருது- மிசா பி.மதிவாணன், அண்ணா விருது- எல்.மூக்கையா, கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது- வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- மு.முபாரக்கிற்கு முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது. சட்டப்பேரவையில் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் மாதந்தோறும் நான் ஆய்வு செய்வேன். தி.மு.க.விற்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம் ஆட்சிதான் நிகழ்ந்திட வேண்டும்; அதற்காக நாம் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் 100-க்கு 100% வெற்றி பெற வேண்டும்" எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.