ஈரோடு மாவட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று (22 பிப்.) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும்; பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்; மூன்று வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்; 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
மாவட்டத் தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சாந்தி, பொருளாளர் அமுதா, மாநிலத் துணைத் தலைவர் மணி மாலை உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழகம் முழுக்க அந்தந்தப் பகுதிகளில் இவர்களின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.