
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் 3-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது. இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சித்ரா, பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் பணமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது போல, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 800 அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதையொட்டி, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.