Skip to main content

கனவு நனவாகியது... ஓய மாட்டேன்... அன்புமணி ராமதாஸ் 

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
anbumani ramadoss



தருமபுரி மக்களின் கனவு நனவாகியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.
 

ஒரு மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களும் தொடர்வண்டிப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கட்டமைப்புத் தேவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த மீதமுள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களின் தலைநகரங்கள் சென்னையுடன் தொடர்வண்டி மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மற்றும் தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரமான கிருஷ்ணகிரி  ஆகியவற்றுக்கு மட்டும் தான் சென்னையிலிருந்து நேரடித் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவில்லை.
 

தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ நீளத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டிப் பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே இந்தப் பாதைக்கு சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.
 

2014-ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு ஆகியோரையும், இப்போது தொடர்வண்டி அமைச்சராக உள்ள பியுஷ் கோயலையும், தொடர்வண்டித்துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பயனாக தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டித் திட்டம் 2016-17 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் வருவாய் விகிதம் -5.60% ஆக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. இத்திட்டத்தை மத்திய - மாநில கூட்டு முயற்சியில் செயல்படுத்தலாம் என்றும், அதற்கான செலவை தலா 50% என்ற அளவில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு தொடர்வண்டி அமைச்சர் கடிதம் எழுதினார்.
 

ஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமாக வருவாய் விகிதம் எதிர்மறையாக உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அத்தகையத் திட்டங்களை தொடர்வண்டித்துறை செயல்படுத்தாது. எனினும், தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நான் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி - மொரப்பூர்  தொடர்வண்டித் திட்டத்துக்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசு கடந்த திசம்பர் 6-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அதாவது 16.01.2019 அன்று இத்திட்டத்திற்கு தொடர்வண்டித்துறை  அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்வண்டி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில்,  எனது கோரிக்கையை பரிசீலித்து சாதனை கால அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 

அடுத்தக்கட்டமாக, இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும். அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துவேன். இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நிறைவேறியிருக்கிறது. மொரப்பூருக்கும், தருமபுரிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் 1906-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டு வரை குறுகியப் பாதையில் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. அதன்பின் இப்போது தான் இந்த வழித்தடத்தில் மின்சார தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவுள்ளது.
 

ரூ.358 கோடியில் 36 கி.மீ தொலைவுக்கு இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க முடியும். அதன்பின்னர் தருமபுரி மக்கள் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டியில் பயணிக்க முடியும். இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் நான் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் வரை நான் ஓய மாட்டேன். தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் விஷயத்தில் தருமபுரி மாவட்ட மக்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.