சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து, அமமுகவினர் உள்ளிட்டோர் கற்கள், கட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்.
பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.
அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.